நூல் அறிமுகம் - எழுத்தாளர் எஸ்.ராவின் நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து (சிறார் புதினம்) - முனைவர் பலராமன் சுப்புராஜ்
நூல் அறிமுகம் - முனைவர் பலராமன் சுப்புராஜ்
எழுத்தாளர் எஸ்.ராவின்
நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து (சிறார் புதினம்)
இந்நூலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார் எழுத்தாளர். தேவை ஒரு பேருந்து, யார் டிரைவர்?, பேருந்தின் வருகை, ஒரு மோதல், பேருந்தின் பறிமுதல், சேதுவின் அம்மா, பேருந்தின் காய்ச்சல், ரெட் டிராகனுடன் போட்டி என எட்டு அத்தியாயங்களாகக் கதை வார்க்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிக்கென்று தனித்த பேருந்து ஒன்றை வாங்கி இயக்குவது என்பதே கதையின் மையம். கதைக் களம் கரிசல் நிலம். அருப்புக்கோட்டை மாவட்டம் மேக்கரை கிராமம். கதை மாந்தர்களாகப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனியப்பன், முந்நாள், இந்நாள் மாணவர்கள், விக்டோரியா பள்ளி நிர்வாகி ராஜலெட்சுமி, டிரைவர் பாலகுரு, சரவண மூர்த்தி, டிரைவர் ஜேக்கப், துரைக்கண்ணு, கிராம பொதுமக்கள், முக்கிய கதைமாந்தராக நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து. பேருந்தை வாங்குவதில் உள்ள சிக்கல், குழப்பம், சுமை என்றான போராட்டத்துடன் கதை நகர்கிறது. வாங்கிய பேருந்தால் ஏற்பட்ட கடும்போட்டிகள், நெருக்கடிகள் அதனால், ஏற்படும் விளைவுகள் கலந்த போராட்டக் களமாகக் கதைப் போக்கு உள்ளது. வேடிக்கையான நிகழ்வுகள், மழைக்கால மகிழ்வுகள் என ஆரோக்கியமான பதிவுகள். அரசுப் பள்ளி x தனியார் பள்ளி, பெருந்தன்மை x ஆற்றாமை, வெற்றி x தோல்வி என்பதான முரண்களின் இயல்புகள், திருப்பங்கள் நிறைந்த கதைப்பின்னலோடு சுவாரசியமாக யதார்த்தத்தோடு கதைப்போக்குச் செறிவாக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை மாவட்டம் மேக்கரை கிராமத்திலுள்ள தணிகை ஆரம்ப அரசு பள்ளியில் பயின்றவர்கள் பலர். அவர்களில் பெரும்பாலானோர் இன்று மிக உயரிய இடத்திற்குச் சென்றுள்ளனர். தற்போது, மேல்நிலைப் பள்ளியாக அது உயர்ந்துள்ளது. இதன், தலைமையாசிரியராகப் பழனியப்பன். விக்டோரியா ஆங்கிலப் பள்ளி அருகிலுள்ள ஆதனூர் என்னும் கிராமத்தில் உள்ளது. இப்பள்ளி உரிமையாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் கல்குவாரியும் நடத்தி வருபவர். நிர்வாகியாக அவரது மனைவி ராஜலெட்சுமி. இங்கு மாணவர்களிடம் அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், தணிகை அரசுப் பள்ளியில் எதற்கும் கட்டமில்லை. இருப்பினும், மக்கள் தொடர்ந்து அப்பள்ளிக்கே செல்கின்றனர். மக்களுடன் பல்வேறு கட்ட கலந்துரையாடலுக்குப் பின் அரசு பள்ளிக்கென்று தனித்த பேருந்து ஒன்றை வாங்கத் திட்டமிடுகிறார் தலைமை ஆசிரியர்.
தணிகை அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களின் செல்வாக்கோடு இப்பள்ளிக்குப் பேருந்து ஒன்று வருகிறது. இந்தப் பேருந்தை இயக்க இந்நாள் பள்ளி மாணவர் சேதுவின் தந்தை பாலகுரு நியமிக்கப்படுகிறார். அரசு பள்ளி பேருந்து இயக்குவதை விக்டோரியா பள்ளி நிர்வாகியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எந்த விதத்திலாவது முடக்க எண்ணினார். அப்போது, தொடங்கிய கடும்போட்டி உச்சம் வரை சென்றது. ஆங்கிலப் பள்ளி நிர்வாகியின் சூழ்ச்சியால், அரசுப் பள்ளிப் பேருந்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. பேருந்து அவமானம், நெருக்கடி, சுமைகள் எனப் பலவற்றைக் கடக்க வேண்டியிருந்தது. இரு பேருந்தும் சந்திக்கும் போதெல்லாம் போட்டி உணர்வு. மாணவர்கள் இப்போட்டியை விரும்பிக் கொண்டாடினர்.
காலைவேளையில், மாணவர்களை ஏற்றிக்கொண்டு வரும் பள்ளிப் பேருந்து, சந்தைக்குச் செல்லும் வியாபாரிகள், மருந்து வாங்கச் செல்பவர்கள், வெளியூருக்குச் செல்பர்வர்கள் எல்லோரையும் சுமந்து கொண்டுதான் செல்லும். மழைக் காலத்தைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்காக வாங்கப்பட்ட பேருந்தில், அதே மழைக் காலத்தில் பேருந்தினுள் மழை. மாணவர்கள் நீண்ட கால நண்பனைச் சந்தித்த மகிழ்ச்சியில் மழையைக் கொண்டாடித் திளைத்தனர். பேருந்திற்குக் காய்ச்சல் வந்தது. பேருந்து மருத்துவரான மெக்கானிக் மருந்தளித்துச் சரி செய்வார். பழைய பேருந்து என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. செப்பனிட்டு மீண்டும் பயணிக்கும்.
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரின் கனவு பள்ளிக்குப் பேருந்தை ஒன்றை வாங்கி இயக்குவது. இது சாத்தியம். ஆனால் அது ஒரு பெரும்போராட்டம். அதனை எதிர்கொள்ள மனத் திண்ணம் வேண்டும். ஆதலால், இக்கதையாடலை அவ்வளவு எளிதில் கடக்க இயலாது. அரசுப் பள்ளி மாணவராக வாசித்த அனுபவத்தில், நாம் செல்ல வேண்டிய தூரம், ஆற்ற வேண்டிய பொறுப்பு ஏராளம் என்பதை உணர்த்தினார் தலைமை ஆசிரியர் பழனியப்பன். அரசியல் மற்றும் தேவையற்ற வாய்ச் சவால்கள், குறுகிய மனப்பான்மை, சின்னப்புத்தி என இன்னும் பிற வளராத போக்கில் கவனம் செலுத்தாமல் மாணவர்களின் நலனே பிரதானம் என்று செயல்பட ஓர் உந்துதல். நமது இல்ல நூலகத்தில் இடம் பெற வேண்டிய நூல். அரசுப் பள்ளி மாணவர்களாக இருந்து உயர்ந்த நிலைக்குச் சென்றவர்களும், ஆசிரியர்களாக ஆனவர்களும், ஒவ்வொரு மாணவர்களும் தவிர்க்காமல், தவறாமல் வாசிக்க வேண்டிய நூல். வாசிப்போம் மன வளம் பெறுவோம்.
தேசாந்திரி பதிப்பகம்
டிசம்பர் 2020 (முதல் பதிப்பு)
பக்கங்கள் - 72
விலை – ரூபாய் 70 /-
*************

கருத்துகள்
கருத்துரையிடுக