என்றென்றும் நன்றியுடன்... தி.க.நேத்ரா, சி.பி.எஸ்.இ மாணவி.

 என்றென்றும் நன்றியுடன்...

தி.க.நேத்ரா, சி.பி.எஸ்.இ மாணவி.

“நண்பனே! ராகவா, நீ எனக்குச் செய்த உதவிக்கு நன்றி!... சொல்ல வார்த்தைகளே இல்லை’’ என்று எங்கோ ஒளித்துக் கொண்டிருந்தது. அந்தக் கால திரைப்படத்தில் கதாநாயகனின் உணர்ச்சி நிறைந்த குரலில்... இவ்வசனம் என் இரு செவிகளையும் துளையிட்டதால், சற்று அதனுள் பயணிக்க முற்பட்டோம். வாருங்கள்! இணைந்தே பயணிக்கலாம்!.

இதில், ‘நன்றி’ என்னும் சொல்லும் ‘உதவி’ என்னும் சொல்லும் என்னை ஏதோ செய்தது. அதேசமயத்தில், இச்சொற்கள் நலிந்து வருவது சிந்திக்கக் கூடியதாகக் கருதினேன். இன்று நம்மில் பலருக்கு இக்கட்டான சூழலில் சிலர் உதவி இருப்பர். அவற்றில், நாம் ஒரு சிலருக்காவது உண்மையிலேயே நன்றி சொல்லி, அகமகிழ்வை ஏற்படுத்தி இருக்கிறோமா? என்று சிந்தித்தால் எஞ்சி நிற்பது என்ன என்பது தங்களுக்கே வெளிச்சம். 

‘உதவி’ என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்று. உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ‘நன்றி’ சொல்ல வேண்டும். குறைபட்சம் நன்றி கலந்த சினேகப் புன்னகையாவது முகத்தில் பிரதிபலிக்க வேண்டும். அப்படிச் செய்தால் அவர்கள் மட்டுமல்ல, நமது மனம் இதமும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் என்பதான உணர்வை உணர்வோம். தாங்கள் எவருக்கேனும் உதவி செய்து அவர்கள் மனமார நன்றி கூறி வாழ்த்தினால், அந்தத் தருணம் மனநிறைவும் நிம்மதியும் அதுசார் அனுபவங்கள் அப்பப்பா..... ஆனந்தம்.... பெரு ஆனந்தம்... ஏற்படும். இன்று பலர் இம்மாதிரியான செயல்பாடுகளை நாம் தவிர்த்ததன் பொருட்டு, அக நிம்மதியை இழந்து உழல்வதற்கு இது ஓர் உளவியல் காரணமாகி நிற்கிறது என்பதே நிதர்சனம்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

  என்று வள்ளுவரின் வாக்குக் குறிக்கத்தக்க ஒன்று. இக்குறளின் பொருள் அனைவருக்கும் பரிட்சயமே! இன்றைய சூழலில் நடப்பது என்னவோ! எல்லாம் தலைகீழ். கலியுகத்தில், நன்றி இல்லாதவற்றை மட்டுமே என்றும் நினைவாகப் பூட்டியுள்ளோம். “அவன் அன்றைக்கு அப்படிப் பேசி இருக்கக் கூடாது. அவள் அப்படி நடந்து இருக்கக் கூடாது. அவன் எனக்கு துரோகம் இழைத்துவிட்டான்” என்பதான எண்ணற்ற எண்ண ஓட்டங்கள் நம் மனதில் எங்கும் வியாபித்துள்ளன. 

குப்பைமேடு. பொதுவாக அனைவருக்கும் துர்நாற்றம் வீசும் இடம் அல்லது பகுதி. இக்குப்பை மேடுகளின் மீது நாம் நாட்டம் கொள்வோமா?. யாராவது, எனக்குப் பிடித்த இடம் அல்லது பகுதி குப்பை(மேடு) என்று கூறுவோமா?. பிறகு ஏன்? இந்த மனக் குப்பைகளின் மீது அளவு கடந்த நாட்டம். இக்குப்பைகளை அகற்றுவோம். நம் மனதில் நன்றி என்னும் பூச்செடியை நடுவோம். அது வளர்ந்து நம் மனம் முழுவதும் மணம் வீசும். நமது மனம் ஒரு வளமான மண். அதில், நன்றி பூந்தோட்டமானால் நமது வாழ்க்கை என்னும் நிலம் முழுவதும் அது பசுமையாக மாறிவிடும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது முதுமொழி. மனம் நன்றியோடு இருந்தால் நல்வாழ்வு உண்டு என்பதான புதுமொழிக்கு ஏற்ப வாழ்வோம். வளம் பெறுவோம்.

“இது என்ன உதவி?. அவன் எனக்குச் செய்ததெல்லாம் உதவியே கிடையாது. நான் அவனுக்குச் செய்தது இதைவிட மேலானது. அவன் செய்தது அது மிகச்சிறிய செயல்”. இப்படிச் சொல்பவரோ பலர். ஐயா, கொடை வள்ளல் அவர்களே! உதவியில் சிறியது என்ன? பெரியது என்ன? என்பதான பாகுபாடு எல்லாம் ஒன்றுமில்லை. உதவி என்றாலே அது உயர்ந்ததுதான். ஆதலால், முதலில் நாம் நம்முள் இருக்கும் உயர்ந்தது, தாழ்ந்தது, தலைக்கனம், பிடிவாதம், அகம்பாவம் ஆகியவற்றைத் தகர்த்து நமக்கு உதவியவர்களுக்கு முதலில் நன்றி செலுத்துவோம். உதவியவருக்கு நன்றி கூறி உறவுகளைப் பலப்படுத்துவோம். இன்று பல உறவுகளிடையே விரிசலுக்குக் காரணமான காரணியை விரட்டிடுவோம். 

ஒருவரின் வாழ்க்கை நம் வாழ்க்கையோடு ஒத்துப்போகவில்லை என்றால் அவர் நமக்கு எதிரி. தீங்கு இழைத்தவராக நாம் கருதுவோம். இதுவே நமது வாழ்க்கையாகிப் போகிறது. யாரேனும் தங்களுக்குத் துரோகம் செய்து விட்டனரா? கவலையை விடுங்கள். அவர்களுக்கும் சேர்த்தே நன்றி கூறுங்கள். ஏனெனில், அவர்கள்தான், தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியப் பாடத்தைக் கற்க காரணமாக இருந்தவர்கள். இவ்வாறு எல்லாவற்றையும் நேர்மறை எண்ணத்தோடு அணுகினாலே நம்முள் நன்றி கூறும் மனப்பக்குவம் ஏற்பட்டு பின் அதுவே வளர்ந்துவிடும். வளர்த்துக் கொள்ளும். நமக்கு நன்மை செய்து உதவியவருக்கு மட்டுமல்ல நமக்குத் தீங்கு இழைத்தவருக்கும் சேர்த்தே இனி நன்றி கூற முற்படுவோம். 

மனிதர்களிடம் எந்த அளவு நன்றி உணர்வுடன் இருக்கிறோமோ! அதைப்போல், அரிய மானிடப் பிறவியை நமக்கு அருளியதற்குத் தெய்வத்திடமும் நாள்தோறும் நன்றி கூற வேண்டும். தெய்வத்திடம் ‘அது வேண்டும். இது வேண்டும்’ என்பதான வேண்டுதலை விட, “இறைவா! எனக்கு நல்வாழ்வு அளித்தமைக்கு நன்றி” என்று கூறிப் பாருங்கள். அன்றைய தினமும், வாழ்வும் இனிமையான ஒன்றாக எண்ணுவீர்கள். தெய்வம் தந்த இப்பிறவியை மண்ணிற்குக் கொண்டு வந்த நமது தாய் தந்தைக்கு நன்றி கூற மறவாதீர். நாம் மற்றவருக்குக் கூட நன்றி கூறி இருப்போம். ஆனால், நமக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி, அனுபவம் அளித்து உறுதுணையாக இருந்தவர்கள் அவர்கள். ஆதலால், அவர்களுக்கும் நன்றி கூறி நன்றி உணர்வுடன் நடந்து கொண்டீர்கள் என்றால், அவர்கள் மனம் நிம்மதியும், நிறைவும், மகிழ்ச்சியும் அடையும். அது மட்டுமல்லாது, உங்கள் மனமும் பெருமகிழ்ச்சி அடையும்.

பின்பு, நம் வாழ்வைச் செதுக்கிய ஆசிரியர்கள். நாம் நம் வாழ்க்கையில் அவர்களுக்குத் தீரா நன்றிக் கடன்பட்டிருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. இவர்கள் அனைவருக்கும் நேரில் சந்தித்து நன்றி கூற வேண்டும் என்பதில்லை. மனதளவில் எப்போதும் எங்கிருந்தாலும் எந்தச் சூழலிலும் நன்றி பாராட்ட வேண்டும். நம் மனதில், ஒருவர் மீது நன்றி பாராட்டல் உணர்வு இருந்தால், அவர்கள் மீது பணிவும், மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நம்முள் அடுத்தவர் மீதான பணிவும், மதிப்பும், மரியாதையும் கூடக்கூட நம் மீது பிறர் வெளிப்படுத்தும் மதிப்பும், மரியாதையும் வளரும் என்பது கண்கூடு. குட்டிக் கதை ஒன்றைக் காணலாம்

தேவா ஒரு துடிப்பான இளைஞர். படிப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்தார். தான் வசித்த நாட்டில் சி.ஏ மிகவும் கடினமான படிப்பாகக் கருதப்பட்டது. அதில், படித்து அந்நாட்டளவில் முதல் மாணவனாகத் தேர்ச்சிப் பெற்றான். அப்போது ஒரு நாள், உலகில் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று கடுமையான வருமான வரி சிக்கலைச் சந்தித்தது. சிறிது தப்பினால் எல்லாம் நட்டம் என்னும் பரிதாபகரமான நிலை. அந்நிறுவனம் தேவாவின் உதவியை நாடியது. தேவாவும் எல்லாம் ஆராய்ந்து வருமான வரி சிக்கலை அனைத்தையும் ஒருவழியாக நட்டமில்லாமல் வெற்றிகரமாக முடித்துவிட்டான். அவன் செய்த பணிக்கு அவன் எவ்வளவு இலட்சம் ஊதியமாகக் கேட்டாலும் தர தயாராக இருந்தது அந்த நிறுவனம். இதை அறிந்த அவனுடைய தொழில்சார் நண்பர்கள் அனைவரும் “நண்பா! தேவா நீ செய்தது மிகப்பெரிய பணி. கரணம் தப்பினால் மரணம் என்று இருந்த நிறுவனத்தைக் காப்பாற்றி உள்ளாய். ஆகையால், அந்த நிறுவனமோ எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தயார். அப்படி இருக்குகையில் நீ எவ்வளவு அதிகமாகக் கேட்டாலும் தவறில்லை” என்று கூறினார்கள்.

மறுநாள் காலையில், அந்த நிறுவனத்தின் நிறுவனர் முன் நின்று இருந்தான் தேவா. அவர் “மிஸ்டர் தேவா! உங்களது கட்டணம் எவ்வளவு என்று சொன்னீர்கள் என்றால், காசோலையாக அளிக்கிறோம்’’. அதற்குத் தேவா சார் இந்த உறையில் என்னோட கட்டண விவரங்களை எழுதி வைத்துள்ளேன் என்றான். நிறுவனர் அதைப் பிரித்துப் படித்தார். படித்த அவருக்குக் கண்களில் நீர் ததும்பியது. கார்ப்பரேட் உலகத்தில் இதுபோன்ற உணர்வுகள் கொண்ட மனிதர்களைக் காண்பது அரிதிலும்  அரிதுதான். அதிவேகமாகச் சென்று தேவாவை ஆரத்தழுவிக் கொண்டார். அப்படி என்னதான் அந்தக் கடிதத்தில் இருந்திருக்கும் என்று அனைவரும் யோசித்தனர். அந்தக் கடிதத்தில்,

எனது திறமையில் நம்பிக்கை வைத்துத் திறன் வாய்ந்த பொறுப்பை, அரிய வாய்ப்பினை அளித்ததற்கு மிக்க நன்றி. என் பணிக்கு நீங்கலாகப் பார்த்து ஒரு ரூபாய் சம்பளமாகக் கொடுத்தாலும் போதும். எனக்கு வேறு எதுவும் வேண்டாம். என் மீதான உங்கள் நம்பிக்கை, அன்பு இருந்தால் அதுவே போதுமானது. மென்மேலும், எனக்கு மனநிறைவைத் தரும். நான் என்றென்றும் தங்களுக்கும் தங்கள் நிறுவனத்திற்கும் நன்றி உடையவனாக இருப்பேன். 

இப்படிக்கு, என்றென்று நன்றியுடன்,

 தேவா. 

நிறுவனர், தேவா நீ என் வயதைவிட மிகச் சிறியவன். ஆனால் நீ செய்த செயலால் என்னைவிட பெரியவன் என்று நிரூபித்தாய். இப்போது, தேவா அதே நிறுவனத்தில் பெரிய பதவியில் மாதம் இரண்டு இலட்சம் சம்பளத்துடன் பணி செய்து கொண்டு இருக்கிறான். நிறுவனர் மீதும், நிறுவனத்தின் மீதும் நன்றி கலந்த உணர்வுடன் நம்பிக்கையாகச் செயல்படுகிறான். நிறுவனரும் அந்த வருமான வரி சிக்கலைத் தன் நிறுவனத்திற்கு ஏற்படுத்திய தெய்வத்திற்கு நன்றி கூறிக்கொண்டிருந்தார். ஏனெனில், இச்சிக்கல் வரவில்லை என்றால் தேவாவைப் போல் நல்லுள்ளங்களைக் கண்டடைய முடிந்திருக்க வாய்ப்பில்லையே.

இக்கதையில், நன்றி கூறினால் பதவியோ, பதவி உயர்வோ, புகழோ, பணமோ கிட்டும் என்று முன்மொழிய விரும்பவில்லை. மாறாக, ‘நன்றி உணர்வு மனிதர்களை இணைக்கும் பாலமாக அது அமையும்’ என்பதை வெளிப்படுத்த விழைகிறோம். இந்நவீன கார்ப்பரேட் உலகில் இது போன்ற பண்புநலன்கள் மனிதர்களை இணைத்து மனிதநேயத்தை வளர்க்க வாய்ப்புள்ளது. இதனை உணர்ந்து நமது வாழ்வில் நாம் அனைவரும் நன்றி பாராட்ட முயல்வோம். அக மகிழ்ச்சியுடன் வாழ்வோம். நன்றி என்னும் மலர்களின் மணத்தைப் பரப்புவோம். இனிவரும் காலங்களை வசந்தமானதாக ஆக்குவோம். என்றென்றும் நன்றியுடன், தி.க.நேத்ரா.

********************


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar